விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் மலை போல் குவியும் ஆடைகள் அபராதம் விதிக்கலாம் என்கிறார் தந்திரி
விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் மலை போல் குவியும் ஆடைகள் அபராதம் விதிக்கலாம் என்கிறார் தந்திரி
ADDED : நவ 29, 2024 01:52 AM
சபரிமலை:பம்பை நதியில் ஆடைகளை பக்தர்கள் விட்டுச் செல்லக்கூடாது என்ற தீவிர பிரசாரம் பலன் அளிக்கவில்லை. மலை போல் குவியும் ஆடைகளை கண்டு தேவசம்போர்டு திகைத்து நிற்கிறது.
கேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பம்பையில் குளித்துவிட்டு தங்களது ஆடைகளை நதியில் விட்டு செல்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு ஐதீகம் சபரிமலை பயணத்தில் இல்லை என்று தந்திரிகளும், தேவசம் போடும் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த ஆண்டு சீசனில் தொடக்கம் முதலே தமிழ், தெலுங்கு, கன்னட, ஆங்கிலம் மொழிகளில் ஆடைகள் நதியில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வேஷ்டிகளும், துண்டுகளும் குவிகின்றன. பம்பை நதி வேகமாக மாசுபடுகிறது.
திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட ஹரிஹர கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் இந்த ஆடைகளை அப்புறப்படுத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. 10 நாட்களில் மட்டும் ஒரு லோடு ஆடைகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக பக்தர்கள்தான் ஆடைகளை விட்டு செல்வதாக இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இங்கு எடுக்கப்படும் வேஷ்டி உள்ளிட்ட ஆடைகள் எருமேலிக்கு கொண்டு சென்று அங்கே உலர வைத்த பின்னர் சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆடைகளை வீசி செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியுள்ளார்.

