ரஷ்ய அதிபர் ஆலோசனை நடத்திய அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பிரதமர்
ரஷ்ய அதிபர் ஆலோசனை நடத்திய அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பிரதமர்
ADDED : டிச 13, 2025 05:32 AM

அஷ்காபாத்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக, 40 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததால் பொறுமை இழந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், திடீரென புடினின் மற்றொரு சந்திப்பு நடந்த அறைக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்காபாதில், அந்நாட்டின் 30வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சர்வதேச மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு இடையே, துருக்கி அதிபர் எர்டோகனுடன் தனியறையில், புடின் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, புடினை தனியாக சந்திக்க விருப்பம் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தரும் அவருக்காக மற்றொரு அறையில் காத்திருந்தனர்.
இந்நிலையில், 40 நிமிடங்களுக்கு மேலாக புடினுக்காக காத்திருந்த ஷெரீப், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, புடின் - எர்டோகன் இருவரும் பேசிக் கொண்டிருந்த தனியறைக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்த, 10 நிமிடத்திலேயே அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது. பாகிஸ்தான் பிரதமரின் இந்த நாகரிகமற்ற செயலை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

