அரசியல்கட்சிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பதில் கேட்கிறது உச்சநீதிமன்றம்
அரசியல்கட்சிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பதில் கேட்கிறது உச்சநீதிமன்றம்
UPDATED : செப் 13, 2025 06:35 AM
ADDED : செப் 12, 2025 11:27 PM

புதுடில்லி : மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை மேம்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசு, தலைமை தேர்தல் கமிஷன் மற்றும் தேசிய சட்ட கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 'நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கு விதிகளை ஏற்படுத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாட்டில் பெருக்கெடுத்துள்ள போலி அரசியல் கட்சிகள், ஜனநாயகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
கடும் அதிருப்தி கடுமையான குற்றவாளிகள், கடத்தல்காரர்கள், போதைப் பொருள் கடத்துவோர் மற்றும் பண மோசடி செய்வோர், அந்தந்த அரசியல் கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களிடமிருந்து பெருந்தொகையை பெற்று பதவிகள் வழங்கும் அரசியல் கட்சியினர், நாட்டை அவமதிக்கின்றனர்.
அவ்வாறு செயல்படும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த எந்த விதி முறைகளும் இல்லை. அதேசமயம், நன்கொடைகளை சேகரிப்பதற்காகவே அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுகின்றன.
இந்த கட்சிகளின் சில நிர்வாகிகள், போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகின்றனர்.
சமீபத்தில் 20 சதவீத கமிஷனை கொடுத்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய போலி அரசியல் கட்சியின் செயல்பாடு கடும் அதிருப்தி அளிக்கிறது.
அரசியல் என்பது பொதுமக்களுக்கு செய்யப்படும் ஒரு சேவை; பொது நலனை சார்ந்தது. அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு அவசியம்.
எனவே, அரசியல் கட்சிகளுக்கு என விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தலைமை தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் வரம்பிற்குள், அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை, வலுவான ஜனநாயக செயல்பாட்டிற்கு வழி வகுக்கும்.
ஒழுங்குமுறை எனவே, அரசியல் கட்சிகளின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்க, மத்திய சட்ட கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசு, தலைமை தேர்தல் கமிஷன், தேசிய சட்ட கமிஷன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதி பதிகள் உத்தரவிட்டனர்.
மனுவில் எந்த அரசியல் கட்சியின் பெயரும் குறிப்பிடாததால், தலைமை தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளின் பெயர்களையும் மனுவில் சேர்க்க, மனுதாரரை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.