மொரீஷியஸின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு... ரூ.6,000 கோடி!: சிறப்பு பொருளாதார தொகுப்பாக அறிவித்தார் மோடி
மொரீஷியஸின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு... ரூ.6,000 கோடி!: சிறப்பு பொருளாதார தொகுப்பாக அறிவித்தார் மோடி
ADDED : செப் 12, 2025 01:03 AM

வாரணாசி: ''மொரீஷியஸ் நாட்டிற்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார நிதி தொகுப்பு வழங்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே கல்வி, எரிசக்தி உள்பட ஏழு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. கிழக்கு ஆப்ரிக்க தீவு நாடான மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திரா ராம்கூலம் அரசு முறைப்பயணமாக, கடந்த 9ம் தேதி நம் நாட்டுக்கு வந்தார். வரும் 16ம் தேதி வரை அவர் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, மனைவியுடன் வாரணாசிக்கு வந்த நவீன்சந்திரா ராம்கூலத்தை உ.பி., கவர்னர் ஆனந்தி பென் படேல் மற்றும் மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா வரவேற்றனர்.
இரு நாட்டு பிரதமர்களையும் வரவேற்கும் வகையில், வாரணாசி விழாக் கோலம் பூண்டிருந்தது. உத்தராகண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி செல்ல வேண்டியிருந்ததால், வாரணாசியில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரே குடும்பம் விமான நிலையத்தில் இருந்து வாரணாசியில் பிரதமர் மோடி தங்கியிருந்த ஹோட்டல் வரை வழியெங்கும் மேளதாளத்துடன், மலர் துாவி, மொரீஷியஸ் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால், நெகிழ்ந்து போன மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம், அதே உற்சாகத்துடன் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா, மொரீஷியஸ் இடையிலான வளமான கலாசார தொடர்பை பிரதிபலிக்கும் வகையில், இரு நாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுக்கு வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இரு நாடுகளும் வெறும் நட்பு நாடுகள் மட்டுமல்ல; ஒரே குடும்பம்.
மொரீஷியஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதற்காக 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும்.
நம்முடைய, 'டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனை தளமான, யு.பி.ஐ., மற்றும் ரூபே அட்டைகள் மொரீஷியஸிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதால், இரு நாடுகளுக்கு இடையே, பரஸ்பரம் உள்ளூர் கரன்சிகளில் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.
சிறப்பு பொருளாதார தொகுப்பின் அடிப்படையில், மொரீஷியஸில் துறைமுகம், விமான நிலையம், சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைப்பதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும்.
புதிய உச்சம் இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு என்பது வெறும் உதவி மட்டுமல்ல, இரு நாடுகளின் எதிர்காலத்திற்கான முதலீடு. இந்தியாவும், மொரீஷியஸும் இரு நாடுகளாக இருக்கலாம், ஆனால் கனவுகளும், எதிர்காலமும் ஒன்று.
காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதை இந்தியா, எப்போதுமே ஆதரிக்கும். அந்த வகையில் மொரீஷியஸ் முழு இறையாண்மை கொண்ட நாடு என இந்தியா அங்கீகரிக்கிறது. இந்த விவகாரத்தில் மொரீஷியஸுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.
சாகோஸ் தீவுகளின் உரிமையை 50 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் கடந்த மே மாதம் பிரிட்டனிடம் இருந்து மொரீஷியஸ் பெற்றது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. இதன் மூலம் மொரீஷியஸின் இறையாண்மை வென்றுள்ளது.
அண்டை நாடுகளுக்கு இடையிலான கொள்கையில், மொரீஷியஸுக்கு எப்போதும் முன்னுரிமை தரப்படும். அந்நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான புதிய இயக்குநரகம் இந்தியா சார்பில் நிறுவப்படும்.
இதற்காக சென்னை ஐ.ஐ.டி., மொரீஷியஸ் பல்கலை., உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகளுக்கு இடையே ஆராய்ச்சி, கல்வி, புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட துறைகள் புதிய உச்சத்தை அடையும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், நீர்நிலைகளின் இயற்பியல் அம்சங்களை ஆய்வு செய்யும் அறிவியல் துறை, கடற்சார் பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி, விண்வெளி ஆராய்ச்சி உட்பட ஏழு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.