விமானத்தில் 'ஏசி' கோளாறு மூச்சு திணறி பயணியர் அவதி
விமானத்தில் 'ஏசி' கோளாறு மூச்சு திணறி பயணியர் அவதி
ADDED : செப் 12, 2025 01:06 AM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்தின் விமானம், 100க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று புறப்பட்டது.
முன்னதாக, விமானத்தில் ஏசியில் கோளாறு ஏற்பட்டதால், உள்ளே இருந்த பயணியர் காற்று வசதி இல்லாமல் அவதிப்பட்டனர்.
மேலும் சிலர், மூச்சு விடவும் சிரமப்பட்டனர். செய்தித்தாள்களை பயன்படுத்தி சிலர் விசிறிக் கொண்டனர்.
அதிருப்தி அடைந்த பயணியர் கூச்சலிட்டனர். தொடர்ந்து, விமானத்தில் இருந்து அவர்கள் இறக்கி விடப்பட்டனர். இதன்பின், விமானத்தின் ஏசியில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
காற்று வசதி இல்லாததால் பயணியர் சிரமப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இச்சம்பவத்துக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.
இதே போல், டில்லியில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு, நேற்று முன்தினம் இரவு, 200 பயணியருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணியர் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்திருந்த நிலையில், விமானத்தின் 'ஏசி'யில் கோளாறு ஏற்பட்டது.
காற்று வசதி இல்லாமல், இரண்டு மணி நேரம் பயணியர் அவதிப்பட்டனர். இதையடுத்து, விமானத்தில் இருந்து பயணியர் இறக்கி விடப்பட்டு தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மாற்று விமானத்தில், நேற்று காலை அவர்கள் சிங்கப்பூருக்கு தாமதமாக புறப்பட்டுச் சென்றனர்.