தங்கம் கிடைக்காததால் 140 கிலோ வெள்ளியை அள்ளிய கொள்ளையர்
தங்கம் கிடைக்காததால் 140 கிலோ வெள்ளியை அள்ளிய கொள்ளையர்
ADDED : டிச 25, 2025 01:27 AM

சிக்கபல்லாபூர்: கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் நகை கடையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்ற மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் டவுன் வாபசந்திராவில், ஜெகதீஷ் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு 12:00 மணிக்கு நகை கடைக்கு வந்த மூன்று பேர், பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கிருந்த வெள்ளி பொருட்களையும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர்., டிஸ்கையும் எடுத்து சென்றனர்.
லாக்கரை உடைக்க முடியாததால், அதில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின. மறுநாள் காலை ஜெகதீஷ் கடைக்கு வந்து பார்த்தபோது, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அவர் போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 140 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

