'கண்டுகொள்ளாமல் இருக்க' லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய ஏ.சி.,
'கண்டுகொள்ளாமல் இருக்க' லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய ஏ.சி.,
ADDED : டிச 25, 2025 01:28 AM

பெங்களூரு: பெங்களூரில், ஹோட்டல் மேலாளரிடம், 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஏ.சி., எனப்படும் போலீஸ் உதவி கமிஷனரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் நள்ளிரவு 12:00 மணிக்கு ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், ராஜாஜி நகரில் உள்ள சாகர் ஹோட்டல், நள்ளிரவையும் தாண்டியும் இயங்கி உள்ளது.
இது தொடர்பாக, அந்த ஹோட்டல் மீது, ராஜாஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கை, மல்லேஸ்வரம் போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி விசாரித்து வந்தார்.
அப்போது, ஹோட்டல் மேலாளர் சஞ்சய் குமாரிடம், 'நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் ஹோட்டல் நடத்துவதை கண்டுகொள்ளாமல் இருக்க, 50,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார்.
மேலாளர் சஞ்சய் குமார் பேரம் பேசி, 30,000 ரூபாய் தருவதாக கூறினார்.
பின், இது குறித்து லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனைப்படி, நேற்று ஏ.சி., அலுவலகத்திற்கு சென்ற சஞ்சய் குமார், அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தியிடம், 30,000 ரூபாயை கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

