பீஹாரில் ஆர்ஜேடி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பீஹாரில் ஆர்ஜேடி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
UPDATED : செப் 11, 2025 09:31 AM
ADDED : செப் 11, 2025 08:53 AM

பாட்னா: பீஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய நிர்வாகி ராஜ்குமார். வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் பகுதியைச் சேர்ந்த இவர், நேற்று ராஜேந்திர நகர் ரயில்நிலையத்தின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவர், ராஜ்குமார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தப்பியோடியுள்ளனர்.
இதில், குண்டு காயம்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரயில்நிலையம் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.