'கவர்னர் தபால்காரர் அல்ல': உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
'கவர்னர் தபால்காரர் அல்ல': உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
ADDED : செப் 11, 2025 09:35 AM

-நமது டில்லி நிருபர்-
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
ஒன்பதாம் நாள் விசாரணை, நேற்று நடந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 'அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர்கள் முட்டுக்கட்டை போடும் விவகாரத்தால், நீண்ட காலமாக நீதிமன்றத்திற்கு, தமிழக அரசுச் சார்பில் அலைந்து கொண்டிருக்கிறோம், ஐந்து ஆண்டுகளுக்கு நல்லாட்சி வழங்குவர் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் ஒரு அரசை தேர்ந்தெடுக்கின்றனர்.
அப்படி தேர்ந்தெடுத்த மக்களுக்கு திட்டங்களை வழங்க வேண்டும் என்றால், மசோதாக்களை கிடப்பில் போடக் கூடாது. ஆனால், கவர்னர்கள் அதற்கு எதிராக நிற்கின்றனர். மசோதாக்களுக்கு, கவர்னர்கள் ஒப்புதல் வழங்குவதை அவர்களுக்கான அதிகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது அவர்களுடைய வேலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனால், மக்களுக்காக இயற்றப்படும் மசோதாக்களுக்கு, கவர்னர்கள் ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் செய்ய வேண்டும். அதைத்தான் உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. அது அவசியமான ஒன்று. இந்த வழக்கு தொடர்பாக, இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.
அப்படி போராடி கிடைத்த இந்த வெற்றி, எந்த வகையிலும் நீர்த்துப் போய் விடக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில் ஜனாதிபதி எழுப்பி இருக்கும் கேள்விகள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும்' என விரிவான வாதங்களை வைத்தார்.
பின், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பல மாநிலங்கலிலும், கவர்னரை தபால்காரராக நினைக்கின்றனர்.
அது தவறான அணுகுமுறை. கவர்னரும் மாநில சட்டசபையில் ஒரு அங்கம் தான். எனவே, ஒரு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது, அவர் தலையிடக்கூடாது என்று கூற, யாருக்கும் அதிகாரம் கிடையாது' வாதங்களை முன் வைத்தார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி கவாய், ''நம்முடைய நாட்டின் அரசியல் அமைப்பு குறித்து, பெருமை கொள்கிறோம். ஏனென்றால் நமது அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிகிறோம். அதுபோன்ற சூழல்கள், நம்முடைய நாட்டிலும் ஏற்படாமல் இருப்பதற்கு, நம்முடைய அரசியல் சாசனத்தின் கட்டமைப்பு தான் காரணம்,'' என பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், ' 'கவர்னர் என்பவர் மாநில கூட்டாட்சிக்கும்; ஜனநாயகத்திற்கும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்,'' என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.
பின், மீண்டும் வாதங்களை முன்வைத்தார் துஷார் மேத்தா. அப்போது, ''ஒரு சில மாநிலங்களில், கவர்னர்களின் செயல்பாடுகளை பெரும் பிரச்னையாக எடுத்துக் கொள்கின்றனர். அதற்காக, அரசியல் சாசனத்தையே திருத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. தேவைப்பட்டால், எந்தவொரு பிரச்னைக்கும், நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்,'' என வாதங்களை அடுக்கினார்.
' 'அனைத்து தரப்பினரும் தங்களுடைய வாதங்களை நிறைவு செய்ய வேண்டும்,'' எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர்.