செல்போனுக்கு வாங்கிய கடன் கட்ட தவறினால் போன் முடக்கம்; நிதி நிறுவனங்களை அனுமதிக்க ஆர்.பி.ஐ., திட்டம்
செல்போனுக்கு வாங்கிய கடன் கட்ட தவறினால் போன் முடக்கம்; நிதி நிறுவனங்களை அனுமதிக்க ஆர்.பி.ஐ., திட்டம்
ADDED : செப் 12, 2025 07:26 AM

புதுடில்லி: கடனை திருப்பி செலுத்தத் தவறுவோரின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் எனத் தெரிகிறது.
செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனையில், மூன்றில் ஒரு பங்கு சாதனங்களை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக 'ஹோம் கிரெடிட் பைனான்ஸ்' ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான, டிராய் தரவுகள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், நுகர்வோர் கடனில் பெரும்பகுதி வகிக்கும் செல்போன் விற்பனையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாராக்கடன் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில், கடனை திருப்பிச் செலுத்தாதவரின் செல்போனை முடக்கும் நடவடிக்கை எடுக்க, நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிகிறது.
கடனில் வாங்கப்படும் செல்போனில், இதற்கென, நீக்க இயலாத, செயலி இடம்பெறச் செய்யப்படும். கடனை கட்டத் தவறினால், இதன் வாயிலாக, செல்போன் செயலிழக்கச் செய்யப்படும். இதனால், கடனை திருப்பிச் செலுத்தும் வரை வாழ்வாதாரம், கல்வி, நிதிச்சேவைகளை இழக்க நேரிடும்.
அத்தியாவசிய தொழில்நுட்ப வசதியை இழக்கும் அபாயம் காரணமாக, கடன் பெற்றவரின் நிதி ஒழுக்கத்தை அதிகரிக்க இயலும் என கருதப்படுகிறது. எனினும், முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.