பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள் 'பல்டி': உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு
பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள் 'பல்டி': உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு
UPDATED : செப் 12, 2025 07:04 AM
ADDED : செப் 12, 2025 05:41 AM

ஜம்மு:பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதான இருவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்., 22 அன்று சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இருவர் கைது தாக்குதல் நடந்த ஐந்து நாட்களுக்குப் பின் வழக்கு விசாரணையை கையில் எடுத்த என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, கடந்த ஜூன் 26 அன்று, பஷீர் அஹமது மற்றும் பர்வேஸ் அஹமது என இருவரை கைது செய்தது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கைதான இருவரும் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், மேற்கொண்டு அவர்களிடம் இருந்து தகவல்களை பெற, உண்மை கண்டறியும் சோதனை நடத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குற்றவாளிகள் இருவரும், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அதிகாரிகள் ஆஜர்படுத்திய நிலையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என இருவரும் பகிரங்கமாக கூறினர்.
வாக்குமூலங்கள் சட்டத்தின்படி, உண்மை கண்டறியும் சோதனைக்கு குற்றவாளிகள் சம்மதம் தெரிவிக்காவிட்டால், அவர்களுக்கு அந்த சோதனையை நடத்த முடியாது எனக் கூறி, என்.ஐ.ஏ.,வின் கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய சிறப்பு நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வகுத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உண்மை கண்டறியும் சோதனை நடத்த குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் அவசியம்.
தவிர, அறிவியல் பூர்வமான இந்த சோதனையின் போது குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் அவர்களது வழக்கறிஞர்கள் முன்பாகவே பதிவு செய்யப்பட வேண்டும்.