எலி மலம், மாவுகளில் வண்டு, காலாவதியான உணவு: சுகாதார சீர்கேடாகும் 'அப்சல்யூட் பார்பிக்யூ' உணவகம்
எலி மலம், மாவுகளில் வண்டு, காலாவதியான உணவு: சுகாதார சீர்கேடாகும் 'அப்சல்யூட் பார்பிக்யூ' உணவகம்
ADDED : செப் 12, 2025 12:58 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள, 'அப்சல்யூட் பார்பிக்யூ' உணவகங்களில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை கண்டுபிடித்தனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 'அப்சல்யூட் பார்பிக்யூ' உணவகங்கள் செயல்படுகின்றன. இங்கு, வகை வகையான அசைவ மற்றும் சைவ உணவுகள், 'அன்லிமிடெட்'டாக கிடைக்கும். இதில் ஒருவருக்கு, அசைவ உணவுக்கு 700 - 800 ரூபாய்; சைவத்துக்கு 600 - 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புகார் ஹைதராபாதில் இயங்கும் அப்சல்யூட் பார்பிக்யூ உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்படி, ஏ.எஸ்.ராவ் நகர், கொம்பள்ளி, மெடிபள்ளி, பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிலி ஹில்ஸ், கச்சிபவுலி, செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் அப்சல்யூட் பார்பிக்யூ உணவகங்களில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சமீபத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, பெரும்பாலான உணவகங்களில், அழுக்கு பாத்திரங்கள், அசுத்தமான தரைகள், சுகாதாரமற்ற கை கழுவும் பகுதிகள், துர்நாற்றமுடைய குளிர்சாதன பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கச்சிபவுலி, பஞ்சாரா ஹில்ஸ் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில், கரப்பான் பூச்சி, ஈக்கள் தொல்லை இருந்தது.
கோரிக்கை மெடிபள்ளி உணவ கத்தில், காலாவதியான உணவு இருந்தது; அழுகிய பழங்கள் இருந்தன. ஏ.எஸ்.ராவ் நகரில் உள்ள கிளையில், வண்டுகள் நிறைந்த மாவு, ரேக்குகளில் எலி மலம், துருப்பிடித்த பொருட்கள் இருந்தன.
இந்த உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக வலைதளங்களில் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.