மின்சார இருசக்கர வாகன மானியம் ரூ.30,000 ஆக உயர்த்தியது ஒடிஷா
மின்சார இருசக்கர வாகன மானியம் ரூ.30,000 ஆக உயர்த்தியது ஒடிஷா
ADDED : செப் 12, 2025 12:52 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவில் பதிவு செய்யப்படும் மின்சார ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை 30,000 ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
'ஒடிஷா மின்சார வாகன கொள்கை' அந்த மாநிலத்தில் 2021 செப்டம்பரில் அமலுக்கு வந்தது.
அதன்படி, 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மாநிலத்தில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களில், 20 சதவீதம் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 9 சதவீத அளவுக்கு மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டதை அடுத்து, 'புதிய மின்சார வாகன கொள்கை 2025' அமல் படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநில போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வரும், 2030 வரையிலான அடுத்த 5 ஆண்டுக்கு அமல்படுத்த புதிய மின் வாகன வரைவு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஆலோசனை கேட்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இதன்படி புதிதாக பதிவு செய்யப்படும் மின்சார இருசக்கர வாகனங்களில் மணிக்கு ஒரு கிலோ வாட் இயங்கும் திறன் கொண்ட பேட்டரிக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இதன்படி ஒடிஷாவில் பதிவு செய்யப்படும் புதிய மின்சார இருசக்கரவாகனங்களுக்கான மானியத்தொகை தற்போதுள்ள 20,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
தற்போது சந்தைக்கு வரும் மின்சார இருசக்கரவாகனங்களின் பேட்டரி திறன் அதிகரித்துள்ளதை அடுத்து, மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர பேட்டரியால் இயங்கும் 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள், டாக்சிகள், பஸ்கள், லாரிகளுக்கும் அரசு அதிக மானியம் வழங்கும்.
இதன்படி டாக்சிகள், நான்கு சக்கர வாகனங்களுக்கு தற்போதுள்ள 1.5 லட்சம் மானியம் 2 லட்சமாக அதிகரிக்கப்படும். பஸ்களுக்கு 20 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இந்த மானியத்தொகையை ஒருவர் ஒருமுறை மட்டுமே பெற முடியும், அவரும் ஒடிஷாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.