ADDED : செப் 11, 2025 03:59 AM

மூணாறு:மேற்கு தொடர்ச்சி மலைகளில் உயரமான பகுதிகளில் மட்டும் காணப்படும் 'குரோகோதெமிஸ் எரித்ரேயா' எனும் அரிய வகை தும்பியை (தட்டான்பூச்சி) மூணாறு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.
இவ்வகை தும்பி ஐரோப்பா, ஆசியா நாடுகள் உட்பட உயரமான பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்ததாக கருதப்படுகிறது. அவை ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதிகள், ஆசியாவில் சில பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உயரமான பகுதிகளில் மட்டும் காணப்படும் என்றபோதும், தாழ்வான பகுதிகளிலும் பரவலாக உள்ளதாக தெரிய வந்தது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தும்பிகளின் உடல் அமைப்பு, நிறம், இறக்கையின் வடிவம், வாழ்விட வேறுபாடுகள் ஆகியவை குறித்து கேரளாவைச் சேர்ந்த வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கலேஷ்சதாசிவன் தலைமையில் 2019 முதல் நடந்த ஆய்வில் 'குரோகோதெமிஸ் எரித்ரேயா' தும்பி கண்டு பிடிக்கப்பட்டது.
அவை மூணாறைச் சுற்றியுள்ள சின்னார், பாம்பாடும்சோலை, ஆனமுடி சோலை, ராஜகுமாரி, வாகமண் மற்றும் பரப்பிகுளம் ஆகிய பகுதிகளில் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.