எலுமிச்சம் பழத்தால் விழுந்து நொறுங்கிய ஜீப்: வாங்கிய முதல் நாளிலேயே நிகழ்ந்த சோகம்
எலுமிச்சம் பழத்தால் விழுந்து நொறுங்கிய ஜீப்: வாங்கிய முதல் நாளிலேயே நிகழ்ந்த சோகம்
ADDED : செப் 11, 2025 03:48 AM

புதுடில்லி: டில்லியில் புதிய ஜீப் வாங்கி, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்து இயக்கிய போது, அதிவேகமாக சீறிய ஜீப், கண்ணாடி தடுப்பை உடைத்துக் கொண்டு முதல் தளத்தில் இருந்து விழுந்து நொறுங்கியது.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாதை சேர்ந்தவர் மாணி பவார், 29.
இவர், தன் கணவருடன் காஜியாபாத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டில்லி ப்ரீத் விஹார் பகுதியில் உள்ள, 'மஹிந்திரா' கார் விற்பனையகத்துக்கு சமீபத்தில் சென்றார்; பலவிதமான கார்களை பார்வையிட்ட பின், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'தார் ராக்ஸ்' ஜீப்பை வாங்கினார்.
அந்த விற்பனை நிலையம், கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. ஜீப்பை 'டெலிவரி' எடுக்கச் சென்ற மாணி பவார், பூஜை போட்டு, டயர்களுக்கு அடியில் எலுமிச்சம் பழங்களை வைத்து, அவற்றின் மீது ஏற்றி ஜீப்பை இயக்க முயன்றார்.
எலுமிச்சம் பழங்கள் நசுங்க வேண்டும் என்பதற்காக, அவர் ஆக்சிலேட்டருக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து இயக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், சீறிப்பாய்ந்த ஜீப், முதல் தளத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக் கொண்டு தரை தளத்தில் விழுந்தது.
மஹிந்திரா விற்பனையகத்தின் எதிரே இருந்த கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் தலைகீழாக விழுந்த புத்தம் புதிய கார் நொறுங்கியது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
ஜீப்பில் இருந்த 'ஏர் பேக்' திறந்து கொண்டதால், அதில் பயணித்த மாணி பவார், அவர் கணவர் மற்றும் மஹிந்திரா நிறுவன ஊழியர் விகாஸ் ஆகிய மூ வரும் காயங்களுடன் தப்பினர்.