வாக்காளர் உரிமை யாத்திரை பீஹாரில் தொடங்கினார் ராகுல்!
வாக்காளர் உரிமை யாத்திரை பீஹாரில் தொடங்கினார் ராகுல்!
UPDATED : ஆக 17, 2025 02:05 PM
ADDED : ஆக 17, 2025 09:18 AM

பாட்னா: பீஹாரில்,'வாக்காளர் உரிமை யாத்திரை தொடங்கிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'இது அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம்,' என்றார்.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தன. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று யாத்திரையை துவங்கினார். இதில் பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
யாத்திரை துவக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல், ''ஒட்டு மொத்த நாட்டிலும், சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் திருடப்படுகின்றன. புகார் கூறியவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், அதேபோன்று கூறிய பாஜ தலைவர்களிடம் அவ்வாறு கூறவில்லை. இது அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம்; ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., அரசியல் சட்டத்தை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர்,'' என்றார்.
பீஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதியில் இன்று துவங்கிய யாத்திரை, அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். செப்., 1ல், தலைநகர் பாட்னாவில் யாத்திரை முடிவடைய உள்ளது.