கடந்த ஆண்டு நடந்த உறவினர் கொலையில் கொலையாளியை கைது செய்த போலீசார்
கடந்த ஆண்டு நடந்த உறவினர் கொலையில் கொலையாளியை கைது செய்த போலீசார்
ADDED : செப் 17, 2025 02:27 AM
ஆக்ரா:உ.பி.,யில் சிறுமியை மிரட்டி, ஆபாசமாக படம் எடுத்து, அந்த படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி, கடைக்காரரை மிரட்டி வந்தவரை கொலை செய்தவரை, ஓராண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு, பிப்ரவரி 18ம் தேதி, உ.பி.,யின் ஆக்ரா நகர் அருகே இந்த கொலை நடந்தது. ராகேஷ், 19, என்ற நபர், டிரம் ஒன்றில் வைத்து, தீயில் எரிக்கப்பட்டார். அவரின் அரை, குறையாக எரிந்த உடலை கைப்பற்றிய போலீசார், யார் என விசாரித்து வந்தனர்.
டி.என்.ஏ., பரிசோதனைக்கு பின், கடந்த திங்கள் கிழமை தேவிராம் என்ற கடைக்காரரை கைது செய்த போலீசார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட நபர், ராகேஷுக்கு அப்போது, 19 வயது தான் இருக்கும். அவர், தேவிராம் என்பவரின் மகளான சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து, அந்த படத்தை இணையத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி, தேவிராமை மிரட்டி வந்தார்.
அவரை தன் கடைக்கு அழைத்து சென்ற தேவிராம் என்ற கடைக்காரர், நித்யகிஷோர் என்பவர் துணையுடன் ராகேஷை அடித்து கொலை செய்தார்.
பின், ராகேஷின் உடலை இருவரும் டிரம் ஒன்றில் வைத்து, லோடு ஏற்ற பயன்படுத்தப்படும் வாகனத்தில் ஏற்றி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு துாக்கி சென்று, தீ வைத்து எரித்தனர்.
அரையும், குறையுமாக எரிந்த உடலை அங்கேயே போட்டு விட்டு வந்து விட்டனர். போலீசார் நடத்திய டி.என்.ஏ., பரிசோதனைக்கு பின் தான், இறந்தது ராகேஷ் என்பது தெரிந்தது.
அதையடுத்து, மால்புரா என்ற இடத்தில் இருந்த தேவிராமை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், நெருங்கிய உறவினரான, அந்த வாலிபரை கொன்று, அரை குறையாக எரித்ததை ஒப்புக் கொண்டார்.
ராகேஷின் மொபைல் போனை, அருகில் ஓடும், காரி ஆற்றில் வீசியதையும் அவர் ஒப்புக் கொண்டார். இந்த கொலை தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.