'போஷ்' சட்ட வளையத்திற்குள் கட்சிகளை கொண்டு வர முடியாது: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
'போஷ்' சட்ட வளையத்திற்குள் கட்சிகளை கொண்டு வர முடியாது: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
ADDED : செப் 17, 2025 02:38 AM

புதுடில்லி : பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும், 'போஷ்' சட்டத்திற்குள் அரசியல் கட்சிகளையும் கொண்டு வரக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் நோக்கில், 2013ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது தான் போஷ் சட்டம். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மீதும் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், அதுல் எஸ்.சந்துர்கர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பணியிடத்தையும், அரசியல் கட்சியையும் எப்படி நீங்கள் சமமாக பார்க்க முடியும்? ஒரு நபர் அரசியல் கட்சியில் சேருகிறார் என்றால், அது வேலை வாய்ப்பு அல்ல. வேலை தேடி யாரும் அரசியல் கட்சியில் சேர முடியாது.
சுய விருப்பத்தின்படி, சேவை மனப்பான்மையுடன், மாத ஊதியம் இல்லாமல் தான் சேர முடியும். அப்படி இருக்கும்போது, பணியிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை தட்டிக் கேட்கும் சட்டத்திற்குள் அரசியல் கட்சிகளை எப்படி சேர்க்க முடியும்?
ஒருவேளை அப்படி சேர்த்தால், மிரட்டி பணம் பறிப்பதற்கு வழிவகுத்து விடும். சிறிய பிரச்னையை தீர்க்க முயன்று, பெரிய பிரச்னைகளுக்கு வித்திட்டது போல் ஆகிவிடும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.