அதிக ஜிஎஸ்டி வரியை மக்கள் மறக்க மாட்டார்கள்: காங்கிரஸ்
அதிக ஜிஎஸ்டி வரியை மக்கள் மறக்க மாட்டார்கள்: காங்கிரஸ்
ADDED : செப் 21, 2025 07:39 PM

புதுடில்லி: ஜிஎஸ்டி மூலம் அதிக வரி வசூலிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள். இதற்காக மத்திய அரசு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலாக உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, வருமான வரிச்சலுகை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட அறிக்கையில், காங்கிரசின் எளிமையான மற்றும் திறமையான ஜிஎஸ்டிக்கு பதில், பாஜ அரசு 9 அடுக்குகள் மூலம் வரி வசூலிக்கும் கப்பார் சிங் வரியை அமல்படுத்தியது. இதன் மூலம் 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ.2.5 லட்சம் கோடி எனப் பேசி சேமிப்பு திருவிழா எனக்கூறி, பெரிய புண்ணுக்கு சிறிய பேன்ட் எய்டை பயன்படுத்த முயற்சி செய்கிறீர்கள். பருப்பு, பென்சில், தானியங்கள், சிகிச்சை, விவசாயிகளின் டிராக்டர் உட்பட அனைத்துக்கும் அதிக வரி வசூலிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள். இதற்காக உங்கள் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசன அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலால் செய்யப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட உரிமை கோருவதற்காக நாட்டு மக்களிடம் டிவியில் உரையாற்றினார்.
ஜிஎஸ்டி என்பது வளர்ச்சியை அடக்கும் வரி என நீண்ட காலமாக காங்கிரஸ் கூறி வருகிறது. அதில் அதிகளவிலான வரி வரம்புகள், அதிக நுகர்வு செய்யும் பொருட்களுக்கு தண்டனை வரி, பெரியளவு வரி ஏய்ப்பு, தவறான வகைப்படுத்துதல் போன்ற சிக்கல்கள் இருந்தன. 2017 முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் வேண்டும் எனக்கூறி வந்தோம். 2024 லோக்சபா தேர்தலின் போது இதனை வலியுறுத்தியே பாத யாத்திரை மேற்கொண்டோம்.
தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தம் போதுமானதாக இல்லை. இன்னும் பிரச்னைகள் நிலுவையில் உள்ளன.
* பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறுகுறு தொழில்துறையினரின் பிரச்னை அர்த்தமுள்ள முறையில் சரி செய்யப்பட வேண்டும். முக்கிய நடைமுறை மாற்றங்களை தவிர, மாநிலங்களுக்கு இடையேயான விநியோகங்களுக்கு வரம்புகளை அதிகரிக்க வேண்டும்.
* ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைத்தறி மற்றும் விவசாய உற்பத்தி போன்ற துறைகளில் எழுந்துள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்.
* மின்சாரம், மதுபானம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் மாநில அளவில் ஜிஎஸ்டியை அமல்படுத்த மாநிலங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
* அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாநிலங்கள் வைத்த முக்கியமான கோரிக்கை சரி செய்யப்படவில்லை.
* 8 ஆண்டுகள் தாமதமான ஜிஎஸ்டி சீர்திருத்தம், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.