பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்; கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அறிவிப்பு
பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்; கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அறிவிப்பு
ADDED : செப் 21, 2025 08:04 PM

ஒட்டாவா: பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த சூழ்நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா ஆஸ்திரேலியா நாடுகள் அறிவித்துள்ளன.
பிரிட்டன்
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது: மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் மோதலுக்கு தீர்வு காணும் வகையில், பாலஸ்தீனத்தை அரசாக நாங்கள் முறையாக அங்கீகரிக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று நான் தெளிவாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த அறிவிப்பு ஹமாஸ் படையினருக்கு அளிக்கும் வெகுமதி என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.
கனடா பிரிட்டன் பிரதமரின் அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த முதல் ஜி7 நாடாக கனடா ஆனது. பிரதமர் மார்க் கார்னி 'பாலஸ்தீன அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டிற்கும் அமைதியான எதிர்காலம் உருவாகும். பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்கிறோம்', என்றார்.
ஆஸ்திரேலியா
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது அரசாங்கம் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார். பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய, பிரிட்டன், கனடா ஆகிய மூன்று நாடுகள் அறிவிப்பு வெளியிட்டதும் இஸ்ரேல் தலைவர்கள் கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் பதிவிட்டு வருகின்றனர்.