'சத்குரு' பேசுவது போல அச்சு அசல் 'வீடியோ': பெண்ணிடம் ரூ.3.75 கோடி 'சைபர்' மோசடி
'சத்குரு' பேசுவது போல அச்சு அசல் 'வீடியோ': பெண்ணிடம் ரூ.3.75 கோடி 'சைபர்' மோசடி
ADDED : செப் 12, 2025 12:29 AM

பெங்களூரு: ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவது போல, அச்சு அசல் 'வீடியோ' வெளியிட்டு, 57 வயது பெண்ணிடம், 3.75 கோடி ரூபாயை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலீடு கர்நாடக மாநிலம், பெங்களூரு, சி.வி.ராமன் நகரை சேர்ந்த, 57 வயது பெண், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, முகநுாலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கோவை ஈஷா நிறுவனர் சத்குரு, 'ஆன்லைன் டிரேடிங்' எனப்படும், இணையதளம் வாயிலாக செய்யப்படும் வர்த்தகம் குறித்து பேசுவது போல வந்த வீடியோவை பார்த்தார்.
வீடியோவில் குறிப்பிடப்பட்ட, 'வாட்ஸாப்' எண்ணை தொடர்பு கொண்டு, வங்கி எண் உட்பட அனைத்து விபரங்களையும் கொடுத்தார்.
இதையடுத்து, அந்த பெண்ணை வலீத் என்பவர் தொடர்பு கொண்டு, 'ஆன்லைன் டிரேடிங்' குறித்து விளக்கினார்.
வலீத் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்த அப்பெண், பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.
'ஸ்விட்ச் ஆப்' அந்த செயலியில், அவர் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாக காண்பித்தது. இதை நம்பியவர் ஏப்ரல் 23ம் தேதி வரை, 3.75 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தார்.
இந்த தொகையை சில நாட்களுக்கு முன், அவர் எடுக்க முயற்சித்தபோது, எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து, வலீத்திடம் கேட்டார். அதன்பின், அவரது மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் போலீசாரிடம் புகா ர் தெரிவித்தார்.
போலீசார் கூறுகையில், 'சைபர் மோசடி நடந்து, பல மாதங்களுக்கு பின், அப்பெண் புகார் அளித்துள்ளார். பணத்தை மீட்பது சவாலான விஷயம். இருப்பினும், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
'சத்குரு பேசுவது போல் அச்சு அசல் தொழில்நுட்பத்தில் போலியான வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதை பார்த்து, உண்மையிலேயே அவர் பேசுவதாக அப்பெண் நினைத்து, முதலீடு செய்துள்ளார்' என்றனர்.