அதிக தற்கொலை நடக்கும் நகரங்கள் சென்னைக்கு 2, பெங்களூரு 3ம் இடம்
அதிக தற்கொலை நடக்கும் நகரங்கள் சென்னைக்கு 2, பெங்களூரு 3ம் இடம்
ADDED : செப் 12, 2025 12:24 AM

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தற்கொலை நடக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னை இரண்டாவது இடம், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் இளம் வயதினர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க, பெங்களூரில் உள்ள, 'நிம்ஹான்ஸ்' மனநல மருத்துவமனை, 2022ம் ஆண்டு, 'நகர்ப்புற சுய தீங்கு ஆய்வு' எனும் திட்டத்தை துவக்கியது.
இதன் மூலம், தற்கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்கொலை செய்வோர் எண்ணிக்கை குறித்த ஆய்வை, தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து, நிம்ஹான்ஸ் மருத்துவமனை நடத்தியது.
ஆய்வில், கர்நாடகாவில் ஓராண்டுக்கு சராசரியாக, 13,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வது தெரியவந்தது. தேசிய அளவில் தற்கொலை அளவு சராசரி, 12.4 சதவீதமாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் தற்கொலை செய்வோரின் சராசரி 20.2 சதவீதமாக உள்ளது.
நாட்டிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நகரங்களில் டில்லி முதலிடத்திலும், சென்னை இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில், 25 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை முயற்சியில் பிழைத்த, 20,861 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 55.76 சதவீதம் பேர் ஆண்கள்; 44.15 சதவீதம் பேர் பெண்கள்.
இவர்கள், நகர்ப்புற சுய தீங்கு ஆய்வு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் மீண்டும் தற்கொலை செய்ய முயற்சிப்பது தடுக்கப்படுகிறது. இருப்பினும், 194 பேர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தனர். அதில், 37 பேர் இறந்தனர்
- நமது நிருபர் -.