மாணவர் நலத்திட்டங்கள் சீர்குலைப்பு மத்திய அரசு மீது என்.எஸ்.யு.ஐ., குற்றச்சாட்டு
மாணவர் நலத்திட்டங்கள் சீர்குலைப்பு மத்திய அரசு மீது என்.எஸ்.யு.ஐ., குற்றச்சாட்டு
ADDED : ஆக 03, 2025 02:28 AM

புதுடில்லி:மாணவர் நலத் திட்டங்கள் சீர்குலைப்பு, கல்வி உதவித்தொகை குறைப்பு மற்றும் பணி நியமனத்தில் முறைகேடு என மத்திய அரசு மீது குற்றம் சாட்டி, என்.எஸ்.யு.ஐ., எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம், புதுடில்லி சாஸ்திரி பவன் அருகே நேற்று போராட்டம் நடத்தியது. சங்கத் தலைவர் வருண் சவுத்ரி உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்திய தேசிய மாணவர் சங்கத் தலைவர் வருண் சவுத்ரி தலைமையில், நூற்றுக்கணக்கான மாணவர்கள், மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரி பவன் அருகே நேற்று திரண்டனர்.
மாணவர் நலத்திட்டங்களை சீர்குலைத்து விட்டதாகவும், கல்வித் உதவித் தொகையை குறைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, வருண் சவுத்ரி பேசியதாவது:
மாணவர்களுகான கல்வி உதவித்தொகையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உதவித் தொகையை வழங்குவதிலும் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது.
மவுலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், ஆயிரக்கணக்கான சிறுபான்மையின மாணவர்கள் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தேசிய தகுதித் தேர்வுக்கான உதவித்தொகை, 2006ம் ஆண்டு முதல் மாதத்துக்கு, 8,000 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும்.
விலைவாசி உயர்ந்து விட்டது. ஆனால், கல்வி உதவித் தொகை மட்டும் உயர்த்தப்படவில்லை.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. மத்திய பா.ஜ., அரசு கல்வித் துறையில், 'அவுட்சோர்சிங்' முறையை புகுத்துகிறது. கல்வியை தனியார்மயமாக்கி, பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை வெளியேற்றுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டம் நடத்திய வருண் சவுத்ரி உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.