ரூ.16 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொலை
ரூ.16 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொலை
ADDED : செப் 14, 2025 12:00 AM

பிஜாப்பூர்: சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த இரண்டு நக்சல்களை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.
சத்தீஸ்கரில், நக்சல் ஆதிக்கம் மிகுந்த பிஜாப்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குள்ள வனப்பகுதியில், நக்சல் ஒழிப்புப் படையினருடன் மாவட்ட ரிசர்வ் படையினர், சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஹித்மா போடியம், 34, மற்றும் முன்னா மத்கம், 25, ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அப்பகுதியில் ஏராளமான வெடி பொருட்களையும், தானியங்கி துப்பாக்கியையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். கொல்லப்பட்ட இருவரையும் பற்றி தகவல் தரும் நபருக்கு, 16 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில், சத்தீஸ்கரில் மட்டும் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 243 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.