ADDED : செப் 14, 2025 12:04 AM

கண்ணுார்: கேரளாவில், ஓய்வு பெற்ற அரசு டாக்டரிடம் போலி ஆன்லைன் வர்த்தக திட்டத்தின் மூலம், 4.43 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அரக்கப்பாடி என்ற பகுதியைச் சேர்ந்த ஜைனுல் அபிதீன், 41, என்பவர், கண்ணுார் மாவட்டத்தில் உள்ள 70 வயதாகும் ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஒருவருக்கு, 'வாட்ஸாப்'பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.
அதில், 'அப்ஸ்டாக்ஸ்' என்ற வர்த்தக தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, அவர் ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பி, ஏப்., - ஜூன் வரையிலான காலத்தில், 4.43 கோடி ரூபாய் அளவுக்கு அந்த டாக்டர் முதலீடு செய்தார்.
பணத்தை திரும்ப எடுக்க முயன்ற போதெல்லாம், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர், இதுகுறித்து கண்ணுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி வழக்குப் பதிந்து விசாரித்த போலீசார், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜைனுல் அபிதீனை கைது செய்தார்.
விசாரணையில், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரது வங்கிக் கணக்கை, அவருக்கு தெரியாமலேயே ஜைனுல் அபிதீன் முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.