பா.ஜ., நாளிதழில் முஸ்லிம் லீக் தலையங்கம்; அச்சடிப்பு தவறால் கேரளாவில் குழப்பம்
பா.ஜ., நாளிதழில் முஸ்லிம் லீக் தலையங்கம்; அச்சடிப்பு தவறால் கேரளாவில் குழப்பம்
ADDED : ஜன 03, 2026 03:04 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், பா.ஜ., சார்பில் வெளியாகும், 'ஜென்மபூமி' நாளிதழில், முஸ்லிம் செய்தித்தாளின் தலையங்கம் தவறுதலாக வெளியானது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், பா.ஜ., வின் அதிகாரப்பூர்வ நாளிதழான, 'ஜென்மபூமி' வெளியாகி வருகிறது. தேசியவாத கருத்துகளையும், சமூக சீர்திருத்தத்தையும் அடிப்படையாக கொண்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன.
தலையங்கம் அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான, 'சந்திரிகா'வும் கேரளாவில் வெளியாகிறது.
இரு நாளிதழ்களும், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் பதிப்புகளை கொண்டுஉள்ளன.
இந்நிலையில், புத்தாண்டு முதல் நாளான நேற்று முன்தினம் வழக்கம் போல் இரு நாளிதழ்களும் வெளியாகின.
'ஜென்மபூமி' நாளிதழின், கண்ணுார் - காசர்கோடு பதிப்பில், 'சந்திரிகா' நாளிதழின் தலையங்கம் வெளியாகிஇருந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் சையத் சாதிகாரி ஷிஹாப் தங்கல் எழுதிய கட்டுரைகளும், 'ஒரு இடது முன்னணி குழுக்கள்' என்ற தலைப்பில் தலையங்கமும், 'ஜென்மபூமி' நாளிதழின் தலையங்கம் பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இதனால், இரு நாளிதழ்களின் வாசகர்களும் குழப்பம் அடைந்தனர். 'ஜென்மபூமி' நாளிதழின் பிற பக்கங்களில் எந்த மாற்றமும் இல்லை.
இரு நாளிதழ்களும், ஒரே அச்சகத்தில் அச்சடிக்கப்படும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கிண்டல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராஜன் கூறுகையில், ''இந்த சம்பவம், முஸ்லிம் லீக் மற்றும் பா-.ஜ., இடையே உள்ள நெருக்கத்தை அம்பலப்படுத்தி உள்ளது. 'ஜென்மபூமி - சந்திரிகா' நாளிதழ்களின் தலையங்கங்கள் இணைந்து 'சந்திர பூமி' உருவாக்கப்பட்டு உள்ளது. இது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்று,'' என, கிண்டலடித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் பத்திரிகை செயலர் மனோஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'ஒரே அச்சகத்தில் இரண்டு செய்தித்தாள்கள் அச்சடிக்கும் போது, தவறுகள் ஏற்படுவது இயல்புதான்.
'பா.ஜ.,வின் ஜென்மபூமியில், முஸ்லிம் லீக்கின் கட்டுரை வெளியான நிலையில், அதில், பா.ஜ.,வை விமர்சிக்கும் கருத்துகள் ஒன்று கூட இல்லாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது' என, விமர்சித்துஉள்ளார்.
அச்சடிப்பில் ஏற்பட்ட பிழையால், அரசியல் எதிரிகளான பா.ஜ., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளிதழ்களின் தலையங்கம் மாறி வெளியானது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பிஉள்ளது.

