ADDED : செப் 15, 2025 03:13 AM

கிரேட்டர் நொய்டா: உத்தர பிரதேசத்தில் மனநலம் பாதித்த, 11 வயது மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஏஸ் நகரைச் சேர்ந்தவர் தர்பன் சாவ்லா; சார்ட்டட் அக்கவுன்டன்ட். இவரது மனைவி சாக் ஷி சாவ்லா, 37. இந்த தம்பதிக்கு, தக்ஸ், 11, என்ற மகன் இருந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால், தாய் சாக் ஷி மன அழுத்தத்தால் தவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், அடுக்குமாடி குடியிருப்பில், 13வது மாடியில் உள்ள வீட்டில் இருந்த சாக் ஷி, கணவர் பக்கத்து அறையில் இருந்தபோது திடீரென மகனுடன் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். இருவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த தர்பன் சாவ்லா, மனைவியும் மகனும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டனர். மேலும் அவரது வீட்டில் சோதனையிட்டபோது, தற்கொலை குறிப்பு ஒன்று எழுதி வைக்கப்பட்டிருந்ததை மீட்டனர்.
கணவருக்கு எழுதப்பட்டிருந்த அந்த குறிப்பில், 'நாங்கள் இந்த உலகை விட்டே போகிறோம். இனி நாங்கள் உங்களுக்கு தொல்லை தரமாட்டோம். எங்கள் இறப்புக்கு யாரும் காரணமல்ல' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருவரும் தற்கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.