ADDED : அக் 10, 2024 10:39 PM
விக்ரம்நகர்:டில்லி சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடியில் இருந்து 15 கோடி ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஆதிஷி நேற்று திடீரென அறிவிப்பு வெளியிட்டார்.
முதல்வர் ஆதிஷி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஆதிஷி பேசியதாவது:
டில்லி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, 10 கோடியில் இருந்து 15 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது நாட்டிலேயே மிக அதிகம்.
காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கூடுதலாக 5 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை, மூன்று மடங்கு அதிகம்.
நகர மக்கள் குடிசைகளில் வசித்தாலும் சரி, பங்களாக்களிலும் சரி, அவர்களின் முன்னேற்றத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு உழைத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மாநில அரசு உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் தவறான நிர்வாகத்தின் விளைவாக டில்லி வரலாற்றில் முதல் பற்றாக்குறை பட்ஜெட் கிடைத்தது. வரும் டிசம்பரில் இருந்து அரசின் நிதி நிலைமை மோசமாகும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சியை மாநில அரசு மறந்துவிட்டது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி ஸ்தம்பித்தது மட்டுமல்ல, மக்கள் நலத் திட்டங்களும் நிறுத்தப்படுகின்றன.
வீரேந்திர சச்தேவா,
பா.ஜ., மாநில தலைவர்

