கேரள அரசியலில் திருப்பு முனை: திருவனந்தபுரம் தேர்தல் வெற்றி குறித்து மோடி பெருமிதம்
கேரள அரசியலில் திருப்பு முனை: திருவனந்தபுரம் தேர்தல் வெற்றி குறித்து மோடி பெருமிதம்
ADDED : டிச 13, 2025 05:07 PM

புதுடில்லி:திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்றுகிறது. மேலும் வக்பு சட்ட திருத்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்த கேரளாவின் முனம்பம் பகுதியில், பாஜ வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜ மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். கேரள மக்கள் யுடிஎப் மற்றும் எல்டிஎப் கட்சிகளால் சலிப்படைந்துவிட்டனர். நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் கூடிய ஒரு விக்சித் கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே வழி என்டிஏ தான் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
கேரளாவின் வளர்ச்சியை முழுமையாக அடைவது பாஜவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். பாஜ இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இந்த அற்புதமான வெற்றிக்கு வித்திட்ட, மக்களிடையே அயராது உழைத்த அனைத்து பாஜ தொண்டர்களுக்கும் எனது நன்றிகள். இன்றைய இந்த வெற்றி நிஜமாகியதற்கு காரணமான, பல தலைமுறை தொண்டர்களின் பணிகளையும் தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய நாள் இது. எங்கள் தொண்டர்களே எங்கள் பலம், அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

