அனைத்து மொழிகளையும் மதிப்போம்: ஹிந்தி தினத்தில் அமித் ஷா கருத்து
அனைத்து மொழிகளையும் மதிப்போம்: ஹிந்தி தினத்தில் அமித் ஷா கருத்து
ADDED : செப் 15, 2025 12:15 AM

புதுடில்லி:'ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கை நிறைந்த வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவோம்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் செப்., 14ம் தேதி ஹிந்தி மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
நம் நாடு, அடிப்படையில் மொழி சார்ந்ததாகும். கலாசாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்து செல்லும் சக்திவாய்ந்த ஊடகமாக நம் மொழிகள் உள்ளன. ஒவ்வொரு சூழலிலும், மனிதன் ஒழுக்கத்துடனும், ஒற்றுமையாக முன்னேறவும் மொழிகள் வழிகாட்டியுள்ளன.
'ஒன்றாக நடப்போம், ஒன்றாகச் சிந்திப்போம், ஒன்றாகப் பேசுவோம்' என்பது நம் மொழியியல் கலாசார உறவின் மைய மந்திரமாக உள்ளது.
திருவள்ளுவரின் கருத்துகள், தெற்கில் ஆர்வத்துடன் படிக்கப்படுவதைப் போல் வடக்கிலும் போற்றப்படுகிறது. சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் ஒவ்வொரு பிராந்திய இளைஞர்களிடமும் தேசிய பெருமையைத் துாண்டுகின்றன.
ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.