ADDED : செப் 15, 2025 12:20 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டில்லி புறப்பட்ட, 'இண்டிகோ' விமானம் திடீர் கோளாறு காரணமாக, 151 பயணியருடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டில்லிக்கு 151 பயணியருடன், இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவியான, லோக்சபா எம்.பி., டிம்பிள் யாதவ் பயணித்தார்.
பகல் 11:00 மணிக்கு புறப்பட்ட விமானம், ஓடுபாதையின் எல்லை வரை சென்றது. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் மேல் எழும்பவில்லை.
அதை, பறக்க வைக்கும் முயற்சியில் போராடிய விமானி, இறுதியில் விமானத்தை ஓடுதளத்திலேயே நிறுத்தினார். இதனால், விமானத்தில் இருந்த பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 151 பயணியரை பத்திரமாக இறக்கி விமான நிலைய காத்திருப்பு அறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மாற்று விமானம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இண்டிகோ விமானத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.