ADDED : டிச 27, 2025 05:42 PM

பெங்களூரு: உண்மையை அறியாமல் கர்நாடக மாநிலம் தொடர்பான விவகாரங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கேரள முதல்வருக்கு கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிச.,20ல் அகற்றப்பட்டன.பாதிக்கப்பட்ட மக்கள் புகாரை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வீடு இழந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.கர்நாடகா அரசின் நடவடிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்து ஒரு வலைதள பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில், மிகவும் அதிர்ச்சியூட்டும், வேதனையான செயல். கர்நாடக அரசு வட இந்திய புல்டோசர் நீதி மாதிரியை ஏற்றுக் கொள்வதாகவும்,சிறுபான்மைக்கு எதிரான ஆக்கிரமிப்பு அரசியல் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந் நிலையில் பினராயி விஜயனின் இந்த பதிவுக்கு கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது;
எங்கள் நகரத்தை நாங்கள் நன்கு அறிவோம். நில மாபியா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் சேரிப்பகுதிகளை அனுமதிக்க விரும்பவில்லை. இந்த நடவடிக்கை பொது நிலத்தை பாதுகாப்பதற்காகவே ஆகும். எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறி வைத்து இல்லை. எங்களுக்கும் மனிதநேயம் இருக்கிறது.
பொது இடங்களை பாதுகாக்க அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. எங்களிடம் புல்டோசர் கலாசாரம் இல்லை. எங்கள் நிலம், பொதுச் சொத்துகளை பாதுகாக்க முயற்சிக்கிறோம். நிலைமையை முழுமையாக அறியாமல் கருத்துத் தெரிவிக்க வேண்டாம்.
பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் பெங்களூருவில் உள்ள பிரச்னைகளை அறிந்திருக்க வேண்டும். உண்மைகளை அறியாமல் அவர் நம்மாநிலத்தின் விஷயங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது. வரவிருக்கும் கேரளா சட்டசபை தேர்தலையை மனதில் கொண்டு இது ஒரு அரசியல் தந்திரம்.
இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறினார்.

