வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புக்கு தர நிர்ணயம்; உருவாக்கியது மத்திய அரசு
வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புக்கு தர நிர்ணயம்; உருவாக்கியது மத்திய அரசு
ADDED : டிச 27, 2025 07:21 PM

புதுடில்லி: உள்நாட்டில் தயாரிக்கும் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளுக்கு தர நிர்ணயத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
பல்வேறு காரணங்களால், இந்திய ராணுவத்தினர், துணை ராணுவப்படைகள் மற்றும் மாநில போலீசார் கண்ணிவெடி, வெடிக்காத குண்டுகள் உள்ளிட்டவற்றை கையாள வேண்டிய நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதுபோன்ற சூழல்களை கையாள்வதற்கு உரிய வழிமுறைகளை வகுக்கப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. இதற்கென 3 வகையான வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளை இந்திய பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றை பல்வேறு தனியார் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளை தயாரித்து வந்தன. இவற்றுக்கான தர நிர்ணயம் என்பது இதுவரை இல்லாமல் இருந்தது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் கோரிக்கையின் பேரில் உருவாக்கப்பட்ட இந்தத் தரத்தை 'IS 19445:2025' என்று அழைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பாராட்டப்படக் கூடிய அளவில் இந்தத் தரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே கூறியதாவது; அரசு கொள்முதல் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சோதனை நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இந்தத் தரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தர நிர்ணயத்தின் மூலம் தரமான பொருள் உற்பத்தியை ஊக்குவிக்க முடியும். குறிப்பாக, முக்கிய பாதுகாப்பு பணிகளின் போது குண்டு செயலிழப்பு அமைப்புகள் மீது நம்பிக்கையை அதிகரிக்கும். இது உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தரத்தை மேம்படுத்தவும், சர்வதேச அளவில் போட்டியிடவும் உதவும், எனக் கூறியிருந்தார்.இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், 'தற்போது இருக்கும் சர்வதேச தயாரிப்புகளை பயன்படுத்துவது மிக எளிதானதல்ல. இந்திய ராணுவத்தினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு முழுமையாக பொருந்தாதவையாக உள்ளன,' எனத் தெரிவித்துள்ளது.உள்நாட்டில் தயாரிக்கும் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புக்கு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இது இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது

