UPDATED : பிப் 09, 2026 01:37 PM
ADDED : ஜன 26, 2026 06:57 AM

ஜனவரி 1, 2004
இன்றைக்கு யாராவது ஒரு விஐபியை பார்த்தால் என்ன?- ராஜ்தீப் கேட்டவுடன்...பலரும் பல பெயர்களைச் சொன்னார்கள். அப்போது பாஜ கூட்டணி ஆட்சி, வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அத்வானியைப் பார்த்தால் என்ன? ராஜ்தீப்பின் கேள்வி அனைவரையும் பரபரப்பாக்கியது.
''ஆனால் ஒரு பிரச்னை,'' என ஒரு புதிர் போட்டார் ராஜ்தீப்.
''நான் கேட்டால் நிச்சயம் அப்பாயின்ட்மென்ட் தர மாட்டார் அத்வானி,'' என்றார் அவர். காரணம், பாஜ அரசுக்கு எதிராக, குறிப்பாக துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமாக இருந்த அத்வானிக்கு எதிராக பல விவாதங்களையும் ஸ்டோரிகளையும் ராஜ்தீப் செய்துள்ளார். இதனால்தான் அப்படி சொன்னார்.
''ஆனால் விஜய் திரிவேதி உதவ முடியும்,'' என ராஜ்தீப் சொல்ல நாங்கள் அனைவரும் விஜயை நோக்கினோம். எங்களுடைய ஹிந்தி செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் விஜய் திரிவேதி. இவருடைய மாமனார் ராஜ்ய சபாவில் பாஜ எம்பியாக அப்போது இருந்தார். இதனால் பாஜவில் என்ன நடக்கிறது என்பது விஜய்க்கு தெரியும். அதோடு, அத்வானி, வாஜ்பாய் உட்பட சீனியர் பாஜ தலைவர்களுடன் பேசக் கூடியவர் விஜய். ஆனால் இதற்காக பாஜ ஆதரவாக எப்போதும் விஜய் செயல்பட்டதில்லை.
சரி போகலாம் என சொன்ன விஜய், அத்வானியுடன் பேச முயற்சித்தார். ஆனால் அவருடைய தொலைபேசி பிஸியாக இருந்ததால் பேச முடியவில்லை.
''நேராக போய் அத்வானிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமே,'' என்றார் விஜய்.
“ஆனால் நம் அனைவரையும் சந்திப்பாரா? முடியாது என சொல்லிவிட்டால் என்ன செய்வது...,” என்று சந்தேகத்தை கிளப்பினார் ராஜ்தீப். கடைசியில் அனைவரும் போவது என முடிவு செய்தோம்.
டென்ஷன் நேரம்
விஜய் திரிவேதி தன் பெயரைச் சொல்லி, உடன் சிலர் வந்திருப்பதாகவும், புத்தாண்டு வாழ்த்த சொல்லத்தான் வந்திருக்கிறோம் என்றும், செக்யூரிட்டியிடம் தகவல் சொன்னார்.
உடனே இது உள்ளே தெரிவிக்கப்பட்டது. 5 நிமிடங்கள் ஆனது. வீட்டிலிருந்து எந்த தகவலும் இல்லை. “நம்மை சந்திப்பார் என்பது சந்தேகம்தான்” என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம், என்றார் ராஜ்தீப். எங்களுக்கோ ஒரே டென்ஷன். பார்லிமென்டில் பல முறை அத்வானியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தித்தது இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக பார்த்ததுதான்.
வரவேற்பு
வீட்டில் உள்ள இந்த தோட்டத்தில் நடந்தாலே போதும். அத்வானியின் பங்களாவும் இப்படித்தான் இருந்தது. “நமக்கு முன்னால் விஜய் போகட்டும்…நாம் அவரைப் பின் தொடர்வோம்... அத்வானியின் கண்களுக்கு முதலில் தெரிவது விஜய்யாக இருக்க வேண்டும்...,” என்றார் ராஜ்தீப். விஜய் திரிவேதி முன்னால் செல்ல நாங்கள் பின்னால் சென்றோம். அத்வானியின் அந்தரங்க செயலர் தீபக் சோப்ரா எங்களை வரவேற்றார். ராஜ்தீப்பை பார்த்ததும் அவர் முகம் மாறியது. இருந்தாலும் புன்னகையுடன், 'வாங்க வாங்க' என்றார்.
நூலகம்
சென்றிருந்த அனைவரைப் பற்றியும், 'என்ன செய்கிறீர்கள்' என கேட்டு தெரிந்து கொண்டார் அத்வானி. நாட்டு நடப்பை பேசிக் கொண்டே, 'என் லைப்ரரியைப் பார்க்கிறீர்களா' என எங்களை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார் அத்வானி. அறை முழுக்க கண்ணாடி போட்ட மர பீரோக்கள். புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலம், ஹிந்தி, உருது, சிந்தி என பல மொழிகளில் புத்தங்களைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே அது ஒரு பெரிய நூலகம் தான்.
“இங்கிருக்கும் அனைத்து புத்தகங்களையும் நீங்கள் படித்துவிட்டீர்களா,” என, நாங்கள் கேட்டோம். “எல்லாவற்றையும் படிக்கவில்லை. சிலவற்றை படித்துள்ளேன். இப்போது கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார், அத்வானி. “துணை பிரதமரோடு உள்துறை அமைச்சக வேலையையும் பார்க்கும் உங்களுக்கு புத்தகம் படிக்க நேரம் உண்டா” என்றோம், நாங்கள். “தினமும் புத்தகம் படிக்க நேரத்தை ஒதுக்கி விடுகிறேன். அந்த நேரத்தில் படிப்பேன்” என்றார், அவர்.
பாயசமும், கமலாவின் கேள்வியும்
“பாயசம் அருமை'' ஒரே குரலில் நாங்கள் பாராட்ட, மகிழ்ச்சியடைந்தார் கமலா. ராஜ்தீப் அருகில் வந்து, “ராஜ்தீப்…அத்வானி சாப் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என நீ எப்போதும் டிவியில் சொல்கிறாய். அது தப்பு... அத்வானி அப்படிப்பட்டவர் அல்ல,” இதைச் சொல்லும் போது கமலா அத்வானியின் முகத்தில் கவலை தெரிந்தது.
ராஜ்தீப் அமைதியாக இருந்தார். இந்த அமைதியைக் கலைத்தார் அத்வானி.
“நானும் கமலாவும் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்தது கிடையாது” என்றார், அத்வானி.
“ஆச்சர்யமாக இருக்கிறதே” என்றோம். “கமலாவுக்கு விமான பயணம் என்றால் அலர்ஜி. எனவே எங்கு நாங்கள் ஒன்றாக சென்றாலும் ரயில்தான்” என்றார், அவர். கமலா அத்வானியின் முகத்தில் லேசான புன்னகை. இப்படி சுமார் ஒரு மணி நேரம் கழிந்த பிறகு அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ஆபீசுக்கு திரும்பினோம். இதன் பிறகு அத்வானியை தனியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கமலா அத்வானி காலமாகிவிட்டார்.
நினைவுகள் தொடரும்!
- அ.வைத்தியநாதன்

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: vaithi@dinamalar.in
