கடிதம் எழுதுகிறேன், அழ வேண்டாம்; கதறிய சிறுவனை தேற்றிய மோடி; குஜராத் விழாவில் நெகிழ்ச்சி!
கடிதம் எழுதுகிறேன், அழ வேண்டாம்; கதறிய சிறுவனை தேற்றிய மோடி; குஜராத் விழாவில் நெகிழ்ச்சி!
UPDATED : செப் 20, 2025 06:16 PM
ADDED : செப் 20, 2025 05:50 PM

ஆமதாபாத்: குஜராத் விழாவில் கதறி அழுத சிறுவனிடம், ''உன் முகவரிக்கு நானே கடிதம் எழுதுகிறேன், அழக்கூடாது,'' என்று ஆறுதல் கூறிய மோடி, ''சின்னஞ்சிறு குழந்தைகளின் அன்பை பெறுவதை காட்டிலும், இந்த வாழ்க்கையில் வேறு எதுவும் பெரிதில்லை,'' என்றார்.
குஜராத் மாநிலத்திற்கு இன்று (செப் 20) பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாவ்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.34,200 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு நடந்த விழா கூட்டத்தில் மேடையில் இருந்தபடி பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன், கையில் பிரதமர் மோடியின் உருவ ஓவியத்தை கையில் ஏந்தியிருந்தான். மோடியை பார்த்தபடி, ஓவியத்தை அசைத்துக் கொண்டிருந்தான்.
இதை கவனித்த மோடி, 'சபாஷ் மகனே, நீ வைத்திருக்கும் ஓவியத்தை நான் பரிசாக பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறினார். 'அந்த சிறுவன் ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டு வந்திருக்கிறான். அவன் இவ்வளவு நேரமாக அங்கேயே நின்று கொண்டிருக்கிறான். அவன் கைகள் வலிக்கும். யாரேனும் அந்த ஓவியத்தை வாங்கி வாருங்கள்' என்று கூறினார். இதையடுத்து அங்கிருந்த காவலர் ஒருவர், சிறுவன் கையில் வைத்திருந்த ஓவியத்தை வாங்கிக்கொண்டார்
ஆனால், காவலர் ஓவியத்தை வாங்கிக்கொண்டதும் சிறுவன் உடனே அழ ஆரம்பித்தான். அதைக்கண்ட மோடி, பேசுவதை நிறுத்தி விட்டு, சிறுவனுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தார்.
''சபாஷ் மகனே. வா மகனே, உன் ஓவியம் எனக்குக் கிடைத்தது. அழ வேண்டிய அவசியமில்லை மகனே. உனது உணர்ச்சி எனக்கு புரிகிறது. புரிந்தது. உன் ஓவியம் கிடைத்து விட்டது. ஓவியத்தில் உன் முகவரி எழுதப்பட்டிருக்கும்,
நானே நிச்சயம் உனக்கு ஒரு கடிதம் எழுதுவேன். சின்னஞ்சிறு குழந்தைகளின் அன்புக்கு பாத்திரமாவதை காட்டிலும், இந்த வாழ்க்கையில் பெரியது எதுவுமில்லை,'' என்றார் மோடி.இதன் பிறகே சிறுவன் சமாதானம் ஆகி, அமைதியாக இருந்தான்.
அரசு விழாவில் கதறி அழுத சிறுவனுக்கு பிரதமர் மோடியே ஆறுதல் கூறி தேற்றிய வீடியோ, இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.