மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை; மன்னர் ஆக்க விரும்புகிறார்; லாலுவை விளாசிய பிரசாந்த் கிஷோர்
மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை; மன்னர் ஆக்க விரும்புகிறார்; லாலுவை விளாசிய பிரசாந்த் கிஷோர்
UPDATED : செப் 20, 2025 04:30 PM
ADDED : செப் 20, 2025 04:29 PM

பாட்னா: 'மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை. பீஹாரின் மன்னர் ஆக்க லாலு பிரசாத் விரும்புகிறார்' என தேர்தல் பிரசாரத்தில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பீஹாரின் ஜலேவில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். அதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் லாலு பிரசாத்திடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மகன் 9ம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை.
பீஹாரின் அரசராக்க லாலு பிரசாத் விரும்புகிறார். நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளைப் பார்க்க வேண்டும். அவர்கள் நன்கு படித்து உள்ளார்கள். அவர்களுக்கு இன்னும் பியூன் வேலை கூட கிடைக்க வில்லை. மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் மக்கள் ஓட்டளிக்க கூடாது.
பணம் வாங்கிக்கோங்க!
தேர்தலின் போது தலைவர்கள் வந்து உங்களுக்கு பணம் கொடுப்பார்கள். அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்? கடந்த ஐந்து ஆண்டுகளில், உங்கள் ரேஷன் கார்டு மற்றும் நிலப் பதிவைப் பெற லஞ்சம் கேட்கப்பட்டதா இல்லையா? அவர்கள் உங்களிடமிருந்து ஐந்து ஆண்டுகளாக பணத்தை கொள்ளை அடித்து விட்டு, இப்போது ரூ.1500-2000 கொடுக்கிறார்கள், அதைத் திரும்பப் பெறுங்கள்.
அது உங்கள் பணம். ஆனால் உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஓட்டளிக்க வேண்டும். இது அதிகாரத்திற்கான போராட்டம். தலைவர்களுக்கு நாற்காலி கிடைக்கும்போது, அவர்கள் அதை மக்களுக்காக பயன்படுத்துவதில்லை. நான் உரைகள் ஆற்றுவதில்லை. ஓட்டு கேட்பதில்லை.
20 ஆண்டுகள்
பீஹாரில் லாலு பிரசாத் யாதவ் 15-20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் நிதிஷ் குமார் ஆட்சி செய்தார். இப்போது நீங்கள் டில்லியில் பிரதமர் மோடிக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர்கள். நீங்கள் எனக்கு ஓட்டு அளித்தால், நான் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால்தான் நான் ஓட்டு கேட்கவில்லை.
ஆனால், 15-20 நிமிடங்களுக்குள் உங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு தீர்வை நான் உங்களுக்கு வழங்குவேன். அப்படி நடக்கவில்லை என்றால் நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதைப் பின்பற்றி, நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளியுங்கள். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.