காங்., கோகோய் குடும்பத்தின் பாக்., தொடர்பு; எஸ்.ஐ.டி., வெளியிட்ட பயங்கர அறிக்கை
காங்., கோகோய் குடும்பத்தின் பாக்., தொடர்பு; எஸ்.ஐ.டி., வெளியிட்ட பயங்கர அறிக்கை
ADDED : செப் 13, 2025 02:07 AM

குவஹாத்தி : ''காங்., தலைவர் கவுரவ் கோகோய் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாகிஸ்தான் தொடர்பு குறித் து விசாரணை நடத்தி, சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, மிகவும் பயங்கரமாக இருக்கிறது.
''இது நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், இழிவுபடுத்த முயற்சிக்கும் ஒரு கும்பலை அம்பலப்படுத்துகிறது,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, அங்கு தற்போதே தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அசாமின் ஜோர்ஹாட் தொகுதி எம்.பி., யான கவுரவ் கோகோய், லோக்சபா எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
இவர், 2013ல், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்பர்ன் என்பவரை திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்நாட்டு அரசிடம் இருந்து அவர் ஊதியம் பெற்றதாகவும், அங்கு பல முறை சென்று வந்ததாகவும் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா குற்றஞ்சாட்டினார். ஆனால், இதை கவுரவ் கோகோய் மறுத்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு டி.ஜி.பி., - சி.ஐ.டி., முன்னா பிரசாத் குப்தா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, மாநில பா.ஜ., அரசு உத்தரவிட்டது.
பல கட்ட விசாரணை நடத்திய இக்குழு, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவிடம் சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
அறிக்கை தொடர்பாக, குவஹாத்தியில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று கூறியதாவது:
சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மிக பயங்கரமாக இருக்கிறது. நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், இழிவுபடுத்தவும் ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது.
இதில் பாக்., குடியுரிமை பெற்றவரும், காங்., - எம்.பி., கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னும் சம்பந்தப்பட்டுள்ளது, மிகவும் தெளிவாக தெரிகிறது.
நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான பல முக்கிய ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு மீட்டெடுத்துள்ளது.
வரும் 22ல், போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல் முடிந்ததும், சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை குறித்து, மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். தொடர்ந்து, பொது மக்களின் பார்வைக்காக அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.