டில்லியில் கார் மோதி நிதியமைச்சக அதிகாரி பலி; மனைவி படுகாயம்
டில்லியில் கார் மோதி நிதியமைச்சக அதிகாரி பலி; மனைவி படுகாயம்
UPDATED : செப் 15, 2025 08:41 AM
ADDED : செப் 15, 2025 08:29 AM

புதுடில்லி: டில்லியில் கார் மோதிய விபத்தில் பைக்கில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த நிதியமைச்சக அதிகாரி நவ்ஜோத் சிங் உயிரிழந்தார்.
நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரங்கள் துறையில் உதவி செயலாளராக பணியாற்றி வந்தவர் நவ்ஜோத் சிங். இவர் நேற்று தனது மனைவியுடன் பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ரிங் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவரது பைக் மீது பிஎம்டபுள்யூ கார் மீது மோதியது. இதில், காயமடைந்த நவ்ஜோத் சிங் மற்றும் அவரது மனைவியையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிடிபி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
நவ்ஜோத் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறினார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, விபத்தில் சிக்கியவர்களை அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல், 17 கிமீ தொலைவில் உள்ள ஜிடிபி நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஏன்? என்று நவ்ஜோத் சிங்கின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை பெண் ஒருவர் ஓட்டி வந்ததாகவும், அவரது கணவர் அருகே அமர்ந்து வந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். மேலும், அவர்களும் காயமடைந்து டாக்ஸி மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்று காரை பறிமுதல் செய்த போலீசார், காரின் உரிமையாளர் ஒரு தொழிலதிபர் என்றும், அவர் குருகிராமில் வசித்து வருவதாகவும் கூறினர்.