கேரளாவில் ஓட்டுப்பதிவில் முறைகேடு இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
கேரளாவில் ஓட்டுப்பதிவில் முறைகேடு இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
UPDATED : ஏப் 18, 2024 02:52 PM
ADDED : ஏப் 18, 2024 12:13 PM

புதுடில்லி: கேரளாவின் காசர்கோடில் நடந்த மாதிரி ஓட்டுப்பதிவில் பா.ஜ.,வுக்கு ஒரு ஓட்டு போட்டால் 2 ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது போன்று ஏதும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு சட்டசபை தொகுதியில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அதில் பா.ஜ.,வுக்கான பொத்தானை ஒரு முறை அழுத்தினால் அக்கட்சிக்கு இரண்டு ஓட்டுகள் விழுந்ததாக கூறப்படுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும், விவிபாட் ஒப்புகைச்சீட்டையும் சரி பார்த்தபோது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் பதிவானது சொல்லப்பட்டது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை
இதற்கிடையே, ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும், விவிபாட்டில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் நடவடிக்கைகள் புனிதமானதாக இருக்க வேண்டும்' எனக் கூறியதுடன், 'ஒப்புகை சீட்டு இயந்திரம் எப்படி செயல்படுகிறது? அதில் முறைகேடு செய்ய முடியுமா?' என்றும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விசாரித்து பதிலளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

