நூடுல்ஸ் முதல் காண்டம் வரை: 2025ல் ஸ்விக்கியில் அதிகம் வாங்கப்பட்ட பொருட்கள்
நூடுல்ஸ் முதல் காண்டம் வரை: 2025ல் ஸ்விக்கியில் அதிகம் வாங்கப்பட்ட பொருட்கள்
ADDED : டிச 23, 2025 06:08 PM

புதுடில்லி: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், இந்தாண்டில், தனது தளத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பொருட்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் இந்தாண்டில் மட்டும் ஒரு லட்ச ரூபாய்க்கு காண்டம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உணவு டெலிவரி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக முன்னேறி வருகின்றன. ஆரம்ப காலத்தில் மெட்ரோ நகரங்களை மட்டுமே குறிவைத்து சேவை வழங்கிய உணவு டெலிவரி நிறுவனங்கள், தற்போது குக்கிராமம் வரை சேவை வழங்குகின்றன. குறிப்பாக, 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய பேரிடர் காலத்தில், உணவு டெலிவரி சேவைகளுக்கு மிக அதிகமான தேவை உருவானது. பலர் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்கினர். இதன் வாயிலாக 'ஸ்விக்கி, 'சொமட்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள் மிகுந்த வளர்ச்சியை கண்டன.
பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி நிறுவன செயலியில் உணவு ஆர்டர் செய்வது, 'இன்ஸ்டாமார்ட்' எனும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை அனுப்புவது போன்ற சேவைகள் வழங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்விக்கி மூலம் 2025ம் ஆண்டு அதிகம் 'ஆர்டர்' செய்யப்பட்ட பொருட்கள் குறித்த விவரத்தை இன்ஸ்டாமார்ட் வெளியிட்டுள்ளது.
இதில், ஆன்லைன் வர்த்தகம் மக்களின் அன்றாட வாழ்வில் எந்தளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தாண்டு மட்டும், ஒவ்வொரு நொடிக்கும் 4 பால் பாக்கெட்கள் ஸ்விக்கியில் ஆர்டர் செய்துள்ளனர். அதேபோல், பனீர் விற்பனை, பாலாடைக் கட்டி விற்பனையை விட 50 சதவீதம் அதிகமாக இருந்தது.
நள்ளிரவு நேரங்களில் மக்கள் தங்களது பசியை தீர்த்துக் கொள்ள மசாலா சிப்ஸ்களை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர்.
மேலும் கறிவேப்பிலை, தயிர், முட்டை, பால் மற்றும் வாழைப்பழம் ஆகியவை மீண்டும் மீண்டும் வாங்கப்பட்ட பொருட்களில் ஆதிக்கம் செலுத்தின. கொச்சியில் ஒரு வாடிக்கையாளர், ஒரே ஆண்டில் 368 முறை கறிவேப்பிலையை ஆர்டர் செய்துள்ளார்.
அதிகம் வாங்கப்பட்ட பொருட்கள்
* பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 4.36 லட்ச ரூபாய்க்கு நூடூல்ஸ் வாங்கியுள்ளார்.
* மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ரெட் புல் சுகர் ப்ரீ பானத்திற்காக 16.3 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஒருவர், செல்லப்பிராணிகளுக்காக 2.41 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஒரே முறையில் 1.7 லட்ச ரூபாய்க்கு ஐபோனையும், 178 ரூபாய்க் லைம் சோடாவையும் வாங்கி உள்ளார்.
நொய்டாவை சேர்ந்த ஒருவர் 1,353 புரோட்டீன் பொருட்களுக்காக 2.8 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து ஒரே கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு 228 முறை காண்டம் வாங்கப்பட்டுள்ளது.
தேநீர் ஆதிக்கம்
10 முக்கிய நகரங்களில் காபியை விட, டீ ஆர்டர் செய்வது தான் அதிகமாக இருந்துள்ளது. ஒரு கப் காபி ஆர்டர் செய்யும் அதே நேரத்தில், 1.3 கப் டீ ஆர்டர் செய்யப்படுகிறது.
மெட்ரோ நகரங்களை தாண்டி இரண்டாம் கட்ட நகரங்களிலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜ்கோட்டில் 10 மடங்கும், லூதியானாவில் 7 மடங்கும், புவனேஸ்வரில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
அதிக செலவு
2025 ல் அதிகபட்சமாக 22 லட்ச ரூபாய்க்கு மேல் ஸ்விக்கியில் ஒருவர் செலவு செய்துள்ளார். அதில் 22 ஐபோன் 18 மாடல், 24 கேரட் தங்க நாணயம் முதல் பால், முட்டை, ஐஸ்கிரீம் மற்றும் பழங்கள் போன்ற அன்றாட தேவைகளும் அடங்கும்.

