கர்நாடக காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் செயிலை பண மோசடி வழக்கில் கைது செய்தது ஈ.டி.,
கர்நாடக காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் செயிலை பண மோசடி வழக்கில் கைது செய்தது ஈ.டி.,
ADDED : செப் 11, 2025 12:08 AM

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் செயிலை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் கிருஷ்ண செயில், 59. இவர், 8 லட்சம் டன் இரும்புத்தாதுவை பெல்லாரியில் இருந்து பெலகாரி துறைமுகத்துக்கு, சட்டவிரோதமாக கடத்தி ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகாரை விசாரிக்கும் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, ஏழாண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2010ல் உத்தரவிட்டது.
இது தொடர்பாக செயில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், செயிலுக்கு வழங்கிய ஏழு ஆண்டு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி மோசடி வழக்கில் செயில் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
இது தொடர்பாக டில்லி, கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 13 மற்றும் 14ல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதில், எம்.எல்.ஏ., செயிலுக்கு சொந்தமான மல்லிகார்ஜுனா ஷிப்பிங் நிறுவனம், பெலகாரி துறைமுக அதிகாரிகளுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பான விசாரணைக்கு பெங்களூரு மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான செயிலை, அமலாக்கத்துறை நேற்று முன்தினம் கைது செய்தது.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து அமலாக்கத் துறையினர் விசாரிக்கின்றனர்.