லஞ்ச பணத்தை வீசிய ஏ.எஸ்.ஐ., ரூ.5,000 அள்ளி சென்ற மக்கள்
லஞ்ச பணத்தை வீசிய ஏ.எஸ்.ஐ., ரூ.5,000 அள்ளி சென்ற மக்கள்
ADDED : செப் 11, 2025 12:13 AM

புதுடில்லி: டில்லியில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுற்றி வளைத்ததால், கையில் இருந்த 15,000 ரூபாய் பணத்தை உதவி சப் - இன்ஸ்பெக்டர் துாக்கி வீசியதில், 5,000 ரூபாயை அவ்வழியாக சென்றவர்கள் அள்ளிக் கொண்டனர்.
டில்லியின் ஹாஸ் காவுசியில் உள்ள பசர் சீதாராம் பகுதியைச் சேர்ந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை சமீபத்தில் அளித்தார்.
நடவடிக்கை அதில், 'ஹாஸ் காவுசி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமார், பொய் வழக்கு போடாமல் இருக்க என்னிடம் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, ராகேஷ் குமாரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக, ரசாயன பொடி தடவிய 15,000 ரூபாய்க்கான 500 ரூபாய் நோட்டுகளை அந்த நபரிடம் கொடுத்து ராகேஷ் குமாரிடம் தருமாறு கூறினர்.
இதையடுத்து, ஹாஸ் காவுசி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வைத்து ராகேஷ் குமாரிடம் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட நபர் நேற்று தந்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராகேஷ் குமாரை சுற்றி வளைத்தனர்.
விபரீதத்தை உணர்ந்த அவர், கையில் இருந்த 15,000 ரூபாய் நோட்டுகளை வீசி ஏறிந்தார். அவ்வழியாக சென்ற மக்கள், 500 ரூபாய் தாள்களை எடுக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
மாயம் சுதாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கு திரண்ட மக்களை விரட்டியடித்தனர். இந்த பரபரப்பான சம்பவத்தின் முடிவில், சாலையில் கிடந்த 10,000 ரூபாயை மட்டுமே லஞ்ச ஒழிப்பு துறையினரால் மீட்க முடிந்தது.
மீதித் தொகையான 5,000 ரூபாய் மாயமானது. இதையடுத்து, லஞ்சம் வாங்கியதற்காக ராகேஷ் குமாரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.