ஆர்.எஸ்.எஸ்., தலைவரை சிக்க வைக்க சதி: 3 அப்பாவிகள் கொலை: மாஜி அதிகாரி 'பகீர்'
ஆர்.எஸ்.எஸ்., தலைவரை சிக்க வைக்க சதி: 3 அப்பாவிகள் கொலை: மாஜி அதிகாரி 'பகீர்'
ADDED : ஆக 15, 2025 12:30 AM

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை சிக்க வைக்க மஹாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் திட்டமிட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ்., உடன் தொடர்பில் இருந்த மூன்று அப்பாவிகளை சித்ரவதை செய்து கொன்றுவிட்டு அதை மறைத்துவிட்டதாகவும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மெஹ்பூப் முஜாவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ளது மாலேகான். விசைத்தறி தொழிலுக்கு பெயர் பெற்றது இந்நகரம். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் கடந்த 2008 செப்., 29ம் தேதி இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.
கைது
இதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; நுாற்றுக்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாகூர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜய் ரஹிர்கர், சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
'உபா' எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களை ஏ.டி.எஸ்., எனப்படும் மஹாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்து வழக்குப்பதிவு செய்தது.
அதன்பின், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
விசாரணை, 2018ல் துவங்கி கடந்த ஏப்., 19ல் முடிவடைந்தது. 300க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், குண்டுவெடிப்புக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சதித்திட்டம் தீட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறி அவர்கள் அனைவரையும், என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது.
இந்த வழக்கு குறித்து ஏ.டி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மெஹ்பூப் முஜாவர் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்பில் இருந்த சந்தீப், ராம்ஜி மற்றும் தீலிப் ஆகிய மூன்று பேரை ஏ.டி.எஸ்., அதிகாரிகள் சட்டவிரோதமாக கைது செய்தனர். அவர்களை சித்ரவதை செய்து கொலை செய்தனர். ஆனால், மூன்று பேரும் தலைமறைவாகி விட்டதாக கூறி, ஆவணங்களை தயார் செய்தனர்.
பொய் வழக்கு
இந்த கொலை நிகழ்ந்து 17 ஆண்டுகள் ஆன பின்னரும், இறந்தவர்கள் இன்றும் உயிருடன் இருப்பது போல கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களது வீடுகளுக்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
இதன் மூலம், மூவரும் எங்கோ தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர் என பொதுமக்களை நம்ப வைத்தனர். மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் தான் இப்படி மோசடி செய்து பொதுமக்களை நம்ப வைத்தார்.
இவ்வழக்கில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை சிக்க வைக்கவும் அதிகாரிகள் முயற்சி செய்தனர். அவரை கைது செய்வதற்கான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தனர்.
'காவி பயங்கரவாதம்' என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கைக்கு திட்டமிட்டிருந்தனர்.
உரிய காரணம் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்ய முடியாது என கூறிவிட்டேன். இதனால், போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் என் மீதே பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார். இதனால், என் 40 ஆண்டுகால போலீஸ் வாழக்கை முடிவுக்கு வந்தது.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை ஒரு முறைகேடான அதிகாரி வாயிலாகவே நடந்தது. 'காவி பயங்கரவாதம்' என்ற ஒன்று இல்லை என நீதிமன்றம் எடுத்த முடிவு சரியானதே. இந்த வழக்கு முற்றிலும் பொய்யாக கட்டமைக்கப்பட்டது.
பிரக்யா மற்றும் கர்னல் புரோஹித்தை இவ்வழக்கில் சிக்க வைக்கவே, 600 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் முன்வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.