யோகியை புகழ்ந்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,: கட்சியை விட்டு நீக்கினார் அகிலேஷ் யாதவ்
யோகியை புகழ்ந்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,: கட்சியை விட்டு நீக்கினார் அகிலேஷ் யாதவ்
ADDED : ஆக 15, 2025 12:33 AM

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ., பூஜா பால், அடுத்த சில மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., ராஜு பால், மர்ம நபர்களால் 2005ல் கொல்லப்பட்டார்.
விவாதம்
ரவுடியாக இருந்து அரசியல்வாதியான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அட்டிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் உள்ளிட்டோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
தேர்தல் தகராறு கொலையில் முடிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்ற வழக்கறிஞர், மர்ம நபர்களால் 2023ல் கொல்லப்பட்டார்.
இதில், தொடர்புடையாக அட்டிக், அஷ்ரப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது, மர்ம நபர்களால் குற்றவாளிகள் இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கொலைக்கு காரணமான மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில், 'விஷன் டாக்குமென்ட் 2047' என்ற பெயரில் 24 மணி நேர மாரத்தான் விவாதம் நேற்று நடந்தது.
பாராட்டு
இதில், இறந்த ராஜுபால் மனைவியும், சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான பூஜா பால் பேசியதாவது:
உத்தர பிரதேசம் ரவுடிகளின் கூடாரமாக இருந்தது. என் கணவரை கொன்றது யார் என்று அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில், நீதி வழங்க வேண்டும் என பலரிடம் முறையிட்டேன். அது, அட்டிக் அகமது போன்ற குற்றவாளிகளை கொல்ல வழிவகுத்தது.
இங்கு, குற்றவாளிகளுக்கு எதிரான பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. பிரயாக்ராஜில் என்னைப் போன்ற பல பெண்களுக்கு முதல்வர் நீதி வழங்கி வருகிறார். முழு மாநிலமும் அவரை நம்பிக்கையுடன் பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி இல்லை
சட்டசபையில், யோகியை புகழ்ந்த அடுத்த சில மணி நேரத்தில், சமாஜ்வாதி கட்சியில் இருந்து பூஜா நீக்கப்பட்டதாக, அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் பூஜா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பலமுறை எச்சரித்தும், அவரின் செயல்பாடுகள், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.
' இனி வரும் காலங்களில், கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க அனுமதி இல்லை. யாரும் அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம்' என, தெரிவித்துள்ளார்.