நக்சலைட்டுகளுக்கு எதிராக மற்றொரு மிகப்பெரிய வெற்றி; படையினருக்கு அமித் ஷா பாராட்டு
நக்சலைட்டுகளுக்கு எதிராக மற்றொரு மிகப்பெரிய வெற்றி; படையினருக்கு அமித் ஷா பாராட்டு
ADDED : செப் 22, 2025 09:23 PM

புதுடில்லி: நக்சலைட்டுகளுக்கு எதிராக நமது பாதுகாப்பு படைக்கு மற்றொரு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.ஏராளமான நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் கொல்லப்பட்டு வரும் நிலையில், மனம் திருந்தி பலரும் சரணடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மஹாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சலைட்டுகளின் தலைவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நமது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; நக்சலைட்டுகளுக்கு எதிராக மற்றொரு மிகப்பெரிய வெற்றியை நமது பாதுகாப்பு படையினர் அடைந்துள்ளனர். மஹாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மாட் பகுதியில், நக்சலைட்டுகளின் மத்தியக் குழு உறுப்பினர்களான கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் காத்ரி சத்யநாராயண ரெட்டி ஆகியோரை சுட்டுக்கொன்றனர். நக்சலைட்டுகளின் தலைமையை அழிப்பதன் மூலம், பயங்கரவாதத்தின் முதுகெலும்பை நமது பாதுகாப்புப் படைகள் முறியடித்து வருகின்றன, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.80 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.