அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் இல்லை: சசி தரூர்
அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் இல்லை: சசி தரூர்
ADDED : செப் 22, 2025 10:19 PM

புதுடில்லி: '' அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை,'' என எச்1பி விசா குறித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் அங்கு தங்கி பணியாற்றுவதற்கான எச்1பி விசா பெறுவதற்கான கட்டணத்தை அதிபர் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியதாவது:இந்த எச்1பி விசா விவகாரத்தில் நாம் விதியை வகுக்க வேண்டாம். இது நமக்கு பின்னடைவு. எதிர்பாராதது. இது குறுகிய காலத்தில் சில தனி நபர்களையும் நிறுவனங்களையும் பாதிக்கும். ஆனால், நீண்ட காலத்துக்கு உண்மையில் நம்மை வலுப்படுத்தக்கூடிய வகையில் பதில்களும் உள்ளன. இந்த விஷயத்தில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று தொடர்ந்து எண்ணக்கூடாது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நமக்கு எதிர்மறையான திசையில் கணிக்க முடியாதவராக இருக்க முடிந்தால், வரும் காலங்களில் அவர் நமக்கு எ திர்பாராத விதமாக நேர்மறையாக மாறக்கூடும்.
அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை. டிரம்ப்பின் முடிவின் விளைவானது, தற்போது அமெரிக்காவில் செய்யப்படும் சில வேலைகள் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் கிளைகளுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவிற்கும் கூட அதிகமாக அவுட்சோர்சிங் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.