ADDED : ஆக 15, 2025 12:49 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், ஹோட்டல் ஒன்றில், 17 வயது சிறுமியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞரை அடித்து, இழுத்துச் சென்ற கும்பல் கொடூரமாக தாக்கிக் கொன்றது.
மஹாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் ஜாம்னரில் வசித்து வந்தவர் சுலேமான் கான், 20,. இவர் இரண்டு தினங்களுக்கு முன் தன் தோழியான 17 வயது சிறுமியுடன், ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 10 பேர் அங்கு வந்தனர். சுலேமான் கானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து வெளியே இழுத்துச் சென்றனர்.
ஆறு முதல் ஏழு மணி நேரம் இடைவிடாமல் சுலேமானை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. விரல் நகங்களை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளது.
அதன்பின்னர் அவரது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று, வீட்டின் முன் வைத்து தாக்கியுள்ளனர்.
அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியது. தலை உட்பட உடலின் முக்கிய பாகங்களில், படுகாயம் அடைந்த சுலேமானை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து ஜாம்னரில் பதற்றம் ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், காதல் விவகாரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்பகை காரணமாகவும் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.