2 வாக்காளர் அடையாள அட்டை: பீஹார் எம்.பி.,க்கு நோட்டீஸ்
2 வாக்காளர் அடையாள அட்டை: பீஹார் எம்.பி.,க்கு நோட்டீஸ்
ADDED : ஆக 15, 2025 12:50 AM

பாட்னா:பீஹாரில், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததாக, மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் கட்சி எம்.பி., வீணா தேவிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, கடந்த 1ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி அங்கம் வகிக்கிறது.
இக்கட்சியைச் சேர்ந்த வீணா தேவி, வைஷாலி தொகுதி எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். இவரது கணவர் தினேஷ் சிங், மேல்சபை உறுப்பினராக உள்ளார்.
லோக் ஜனசக்தி எம்.பி., வீணா தேவி, அவரது கணவர் தினேஷ் சிங் ஆகியோர், இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, வீணா தேவி, அவரது கணவர் தினேஷ் சிங் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
முசாபர்பூர் சட்டசபை தொகுதியில், என் பெயர் எப்படி இடம் பெற்றது என, தெரியவில்லை. நான், சாஹேப்கஞ்ச் சட்டசபை தொகுதியின் வாக்காளர். இந்த விவகாரத்தை நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டேன். உடனே, முசாபர்பூர் தொகுதியில் என் பெயரை நீக்க விண்ணப்பித்துள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதை கண்டுகொள்ள வேண்டாம். வீணா தேவி லோக்சபா எம்.பி., - லோக் ஜனசக்தி