ADDED : செப் 17, 2025 02:25 AM
புதுடில்லி,:மத்திய மற்றும் வடக்கு டில்லியில் பாதுகாப்பை மேம்படுத்த, ஜாகுவார் ரோந்து பைக்குகள் மற்றும் ஜான்ஸி ரோந்து ஸ்கூட்டிகள் என்ற இரண்டு புதிய ரோந்து குழுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புதிய ரோந்துக் குழுக்களை, டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் பிரிவு கமிஷனர் ரவீந்திர சிங் யாதவ், செங்கோட்டையில் இருந்து நேற்று துவக்கி வைத்தார்.
இந்தக் குழுக்களில் ஆண் போலீசார் இயக்கும் 71 ஜாகுவார் பைக்குகள், பெண் போலீசாரால் இயக்கப்படும் 15 ஸ்கூட்டிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து வண்டிகளிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிகழும் மற்றும் உணர்திறன் மிக்க பகுதிகளை உள்ளடக்கும் வகையில் வழித்தடங்களில் இந்தக் குழுவினர் ரோந்து செல்வர்.
பெண் போலீசைக் கொண்ட ஜான்ஸி குழுக்கள் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலக வளாகங்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ரோந்து செல்வர்.
பரபரப்பான சாலைகள் மற்றும் முக்கியச் சந்திப்புகளில் ஜாகுவார் குழுக்கள் ரோந்து செல்லும் என போலீசார் கூறினர்.