பட்டப்பகலில் புகையிலை கிடங்கில் கொள்ளையடித்த கும்பலில் மூவர் கைது
பட்டப்பகலில் புகையிலை கிடங்கில் கொள்ளையடித்த கும்பலில் மூவர் கைது
ADDED : செப் 17, 2025 02:26 AM
புதுடில்லி:பான் மசாலா எனும் புகையிலை பொருள் கிடங்கில் இருந்து, துப்பாக்கி முனையில், 14 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த ஐந்து பேர் கும்பலில் மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், இருவரை தேடி வருகின்றனர். அந்த கும்பலுக்கு தலைவனையும் தேடி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள அர்தலா பீர் என்ற இடத்தில் கூடிய சுஹைல், ராகுல், சமீர், மொமின் மற்றும் சர்மா ஆகிய ஐந்து ரவுடிகள், திருடப்பட்ட கார் ஒன்றில், டில்லி அருகே உள்ள ஆனந்த் விஹார் என்ற இடத்திற்கு புறப்பட்டனர்.
அந்த காரை சுஹைல் ஏற்பாடு செய்திருந்தார். ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள புகையிலை கிடங்கில், பட்டப் பகலில் புகுந்த அந்த கும்பலில் இருந்தவர்கள், துப்பாக்கியை காட்டி மிரட்டி, 14 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த கும்பல், ரஷீத் என்ற கொள்ளைக்கும்பல் தலைவன் தலைமையிலான கோஷ்டி என்பதை கண்டறிந்து, தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கூறியதாவது:
டில்லி போன்ற அதிக போலீஸ் நடமாட்டம் மிகுந்த இடங்களில் கொள்ளையடிக்க விரும்பாத கொள்ளை கும்பல் தலைவன் ரஷீத், அந்த கொள்ளை கும்பலில் இருந்த பிறரின் துாண்டுதலால், கொள்ளை நடந்த இடத்தில் அதிக பணம் புழங்குவதை அறிந்து, அந்த கொள்ளைக்கு திட்டம் போட்டுக் கொடுத்தார்.
அந்த கும்பலில் இருந்தவர்கள், ரஷீத்தின் திட்டப்படி, ரிஷப் விஹார் என்ற இடத்தில் உள்ள அந்த புகையிலை கிடங்கில் இருந்து, துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்தனர். பின், பாக்பாத் என்ற இடத்தில் அருகே இந்த கும்பலை சேர்ந்தவர்கள், பிரிந்து சென்றனர்.
அதையடுத்து, நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், அந்த கும்பலை சேர்ந்த தீபக் சர்மா, மொமின் மற்றும் அமிர் சுஹைல் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை படி, இந்த பட்டப்பகல் கொள்ளை தொடர்பாக மேலும் இருவரை தேடி வரும் போலீசார், இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட ரஷீத்தையும் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் இன்னொரு வெளிநாட்டு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சர்மா என்ற கொள்ளையன் பெயரில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அதுபோல, மொமின் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
மேலும், குருகிராம் பகுதியில் ஹோம் அப்ளையன்சஸ் கடை நடத்தி வரும் சுஹைல் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.